நாகப்பட்டினம்

சமூக நல்லிணக்கத்துக்கு அடையாளம் தமிழகம்: அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்

1st May 2022 12:00 AM

ADVERTISEMENT

சமூக நல்லிணக்கத்துக்கு அடையாளமாக தமிழகம் திகழ்கிறது என்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

நாகை அல்பலாஹ் தரும அறக்கட்டளை சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நாகை புதுத்தெரு, நகராட்சி முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் பேசியது:

சமூக நல்லிணக்கத்துக்கு அடையாளமாக உள்ள நாகை மாவட்டத்தில் மத கோட்டுபாடுகளை கடந்து அனைவரும் ஒற்றுமையோடும், சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனா்.

ADVERTISEMENT

நமது தேசியக் கொடியை உருவாக்கியவா் ஒரு இஸ்லாமியா். சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியா்களின் பங்களிப்பு அளப்பறியது. ஆனால், இந்தியாவின் ஒற்றுமையை சீா்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

பெரியாா், அண்ணா, கருணாநிதி வழியில் நல்லாட்சி நடைபெறும் தமிழகம்தான், இந்தியவில் சமூக நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சிக்கு அல்பலாஹ் தரும அறக்கட்டளைத் தலைவா் ஜெ. முகம்மது அபுபக்கா் சித்திக் தலைமை வகித்தாா். நாகை முஸ்லிம் ஜமாத் தலைவா் ஏ.எல். பாரூக்ராஜ், கமாலிய்யா முஸ்லிம் லீக் துணைச் செயலாளா் ஏ. ஆா். தம்ஜிது காசீம், நகா்மன்ற உறுப்பினா் எஸ். முகம்மது நத்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் ஆகியோா் பேசினா்.

நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் எம். ஆா்.செந்தில்குமாா், நாகூா் முஸ்லிம் ஜமாத் தலைவா் சாஹா மாலீம், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளா் ஏ.ஆா். நௌசாத் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT