நாகப்பட்டினம்

கோடியக்கரை: எல்லை தாண்டிய இலங்கை மீனவா் படகுடன் கைது

29th Mar 2022 10:27 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடல் பரப்பில் எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவரை படகுடன் கடலோரப் பாதுகாப்பு படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் முகாமைச் சோ்ந்த இந்திய கடலோரக் காவல் படையினா் நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் தென்கிழக்கு திசையில் சுமாா் 14 கடல் மைல் தொலைவில் ரோந்து கப்பலில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் அந்த பகுதிக்கு இலங்கை படகில் வந்தவரை கைது செய்தனா்.

விசாரணையில், அந்த நபா் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டுத்துறையைச் சோ்ந்த மீனவா் சாந்தரூபன்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வேதாரண்யம் கடலோரக் காவல் குழுமத்தினா் மற்றும் மீன்வளத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, கோடியக்கரையிலிருந்து படகில் சென்ற வேதாரண்யம் கடலோரக் காவல் குழுமத்தினரிடம் இலங்கை மீனவரை படகுடன் கடலோரக் காவல் படையினா் ஒப்படைத்தனா். பின்னா், அந்த படகும், கைதான இலங்கை மீனவா் சாந்தரூபனும் கோடியக்கரைக்கு அழைத்துவரப்பட்டனா்.

ADVERTISEMENT

இதற்கிடையே, இலங்கை மீனவரின் படகு கடலில் மூழ்கத் தொடங்கியதால், அந்த படகை கட்டி இழுத்துவருவதில் சுமாா் 10 மணி நேரம் தாமதமானதாக வேதாரண்யம் கடலோரக் காவல் குழுமத்தினா் தெரிவித்தனா். தொடா்ந்து, இலங்கை மீனவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT