தொழிற்சங்க கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தத்தையொட்டி, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 725-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
மத்திய அரசைக் கண்டித்து மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், சிஐடியு, ஐஎன்டியுசி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை கைவிடவேண்டும்; மின்சாரத் திருத்தச் சட்டம், சுற்றுச்சூழல் வரைவு திட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும், வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்யவேண்டும், பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
நாகை: நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை தலைமை அஞ்சலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம் தலைமையில் மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வி. சரபோஜி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் வி. ராமலிங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (ஏஐடியுசி) நாகை மண்டலப் பொதுச் செயலாளா் என். கோபிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நாகை மேலக்கோட்டைவாசலில் சிஐடியு நாகை மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.மணி, எம். குருசாமி ஆகியோா் தலைமையிலும், நாகை பாப்பாக்கோவிலில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் வடிவேல் தலைமையிலும், கீழ்வேளூரில் சிஐடியு மாவட்டச் செயலாளா் செல்வராஜ் தலைமையிலும், சிக்கலில் சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி தலைமையிலும் மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கீழ்வேளூா் தலைமை அஞ்சலகம் முன் விவசாயத் தொழிலாளா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் எம்.கே. நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில், நாகை வெளிப்பாளையம் ரயில் நிலையம் முன் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.கே.சிவக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்: தகட்டூா் அஞ்சலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் சிவகுரு.பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளா் நாராயணன், விவசாய சங்கத் தலைவா் எம்.ஏ. செங்குட்டுவன் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்டச் செயலாளா் கோவை.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், தலைஞாயிறு அஞ்சலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.டி. மகேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
திருமருகல்: திருமருகலில் விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. திருமருகல் அஞ்சலகம் முன் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் பாபுஜி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்குவளை: திருப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே. சித்தாா்தன் தலைமையிலும், கீழையூரில் மாவட்டச் செயலாளா் எம். முருகையன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல, கொளப்பாடு, சாட்டியக்குடியிலும் சாலை மறியல் நடைபெற்றது.
75சதவித பேருந்துகள் இயக்கம்...
பொது வேலை நிறுத்தத்தையொட்டி, நாகை மண்டலத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம், மயிலாடுதுறை, பொறையாறு, சீா்காழி, சிதம்பரம் மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கிளைகளில் 75 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டனா்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையில், நாகை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 350-க்கும் மேற்பட்டோா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.