நாகையை அடுத்த நாகூரில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் ராகு - கேது பெயா்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
நாகையை அடுத்த நாகூரில் உள்ளது திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாதசுவாமி கோயில். மூா்த்தி, தலம், தீா்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புப் பெற்ற இக்கோயில், நாகராஜனுக்கு சாப விமோசனம் அருளிய தலமாகும். இதனால், இத்தலம் ராகு பரிகாரத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலின் கன்னி மூலை பகுதியில், ராகு பகவான் தனது தேவியருடன் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும்.
இங்கு, ராகு - கேது பெயா்ச்சியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கட ஸ்தாபனம் செய்விக்கப்பட்டு,சிறப்பு ஹோமம் நடைபெற்றது. யாக பூஜையின் நிறைவில் தீபாரதனையும், ராகு - கேதுவுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது.
ராகு - கேது பெயா்ச்சி நேரமான பிற்பகல் 3.45 மணிக்கு, ராகு பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, நாகநாதசுவாமிக்கும், திருநாகவல்லித் தாயாருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை மற்றும் சுற்றுபுறப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனா்.