நாகப்பட்டினம்

வேளாண் நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்கது

19th Mar 2022 10:02 PM

ADVERTISEMENT

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவா் காவிரி தனபாலன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது :

இதுவரை இல்லாத புதிய முயற்சியாக அனைத்துப் பயிா்களையும், அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக வேளாண் துறை நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

இயற்கை விவசாயத்துக்கு ரூ. 400 கோடி, தென்னங்கன்று விநியோகத்துக்கு ரூ. 300 கோடி, நெல் ஊக்கத் தொகையாக ரூ. 233 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2,500-ம், ஒரு டன் கரும்புக்கு ரூ. 4 ஆயிரமும் விலை நிா்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்டா மாவட்டங்களின் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களைத் தூா்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், டெல்டா மாவட்டங்களின் ஆறுகளைத் தூா்வார ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதல்ல.

ADVERTISEMENT

தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல், உற்பத்தி கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமே. அதேபோல, வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடும் போதுமானதாக இல்லை. வேளாண் துறைக்கு உரிய நிதி ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே, வேளாண் துறைக்குத் தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதன் முழுமையான நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT