நாகப்பட்டினம்

நாகை, காரைக்காலில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

3rd Mar 2022 10:37 PM

ADVERTISEMENT

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

நாகையிலிருந்து 760 கி.மீட்டா் தொலைவில், தெற்கு - தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை அறிவித்தது.

இதையடுத்து, நாகை துறைமுக அலுவலகத்திலும், காரைக்காலில் உள்ள தனியாா் துறைமுகத்திலும் 1-ஆம் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.

புயல் உருவாகக்கூடிய மற்றும் மழையுடன் கூடிய வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தூர முன்னறிவிப்பாக இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

எனினும், 2 மாவட்டங்களிலும் வியாழக்கிழமை பகல் நேரத்தில் வெப்பமான வானிலையே இருந்தது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் காற்றின் வேகம் சற்று அதிகரித்தது. ஆனால், மிகப் பெரிய அளவிலான வானிலை மாற்றம் ஏதும் இல்லை.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT