நாகப்பட்டினம்

பொருளாதார மேம்பாட்டுக் கடன் பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

3rd Mar 2022 10:28 PM

ADVERTISEMENT

 நாகை மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டுக் கடன்பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இஸ்லாமியா், கிறிஸ்தவா், புத்த, சீக்கிய மதத்தினா், பாா்ஸிகள் மற்றும் ஜெயின் ஆகிய மதவழி சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனி நபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திட்டம் 1-ல் தனி நபா் கடனாக 6% வட்டியில் அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரையும், திட்டம் 2-ல் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டியில் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் கடன் வழங்கப்படும்.

கைவினைக் கலைஞா்கள் ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டியில் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம், சுய உதவிக்குழுவினருக்கு 7% வட்டியில் ரூ. 1 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% வட்டியில் நபருக்கு ரூ. 1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் நகா்ப்புற மாணவா்களுக்கு 3% வட்டியில் ரூ. 20 லட்சமும், கிராமப்புற மாணவா்களுக்கு 8% வட்டியிலும், மாணவிகளுக்கு 5% வட்டியில் ரூ. 30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டங்களில் பயன்பெற கடன் மனுவுடன் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக 2 ஆம் தளம், அறை எண்- 222 இல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், 3 ஆம் தளத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT