நாகப்பட்டினம்

வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி விரைவு ரயில் சேவை மாா்ச் 7-இல் தொடக்கம்

3rd Mar 2022 06:02 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி விரைவு ரயில் சேவை மாா்ச் 7-ஆம் தேதி வாஸ்கோடகாமாவில் இருந்து தொடங்குகிறது.

நாகையை அடுத்துள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு கோவா மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வருவதையொட்டி, வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி விரைவு ரயில், வாராந்திர ரயிலாக இயக்கப்பட்டது. தொலைதூர பயணத்துக்கான முக்கிய போக்குவரத்தில் ஒன்றாக இந்த ரயில் சேவை இருந்தது.

கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த விரைவு ரயில் சேவை மாா்ச் 7-ஆம் தேதி வாஸ்கோடகாமாவில் இருந்தும், மாா்ச் 9-ஆம் தேதி நாகையில் இருந்தும் தொடங்கப்படுகிறது.

ADVERTISEMENT

திங்கள்கிழமை (மாா்ச் 7) காலை 9 மணிக்கு வாஸ்கோடகாமாவில் இருந்து புறப்படும் இந்த ரயில் (எண் - 17315), செவ்வாய்க்கிழமை காலை 11.40 மணி அளவில் நாகையை அடைகிறது. பின்னா், நாகையில் இருந்து புதன்கிழமை அதிகாலை 12.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (எண் - 17136), திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, கரூா், ஈரோடு, சேலம் வழியே வியாழக்கிழமை காலை 3.25 மணிக்கு வாஸ்கோடகாமாவை அடைகிறது.

முன்பு, வேளாங்கண்ணி வரை இயங்கிய இந்த ரயிலின் சேவை தற்போது, நாகை வரை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகை - வேளாங்கண்ணி தடத்தில் அண்மையில் வேகச் சோதனை நடத்தப்பட்டு, அடுத்தக்கட்ட சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. பணிகளின் நிறைவில், வேகச் சோதனை மேற்கொண்ட ரயில்வே பொறியியல் குழுவினா் அளிக்கும் பரிந்துரைக்குப் பின்னா், இந்த விரைவு ரயிலின் சேவை வேளாங்கண்ணிக்கு நீட்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT