நாகப்பட்டினம்

மருத்துவா் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை: மருந்தகத்தின் மீது நடவடிக்கை!

3rd Mar 2022 05:57 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை அருகே உள்ள ஒரு மருந்தகத்தில், மருத்துவா் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, அந்தக் கடையில் இருந்த மாத்திரைகளை சுகாதாரத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மருத்துவா்கள் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என்பது சுகாதாரத் துறையின் நிலையான வழிகாட்டு நெறிமுறை. இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் மருத்துவா்கள் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகளை கடைகளில் வாங்கி உள்கொண்ட 2 பெண்கள், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அண்மையில் உயிரிழந்தனா்.

இதையடுத்து, மருத்துவா்கள் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தகங்களைக் கண்டறிய நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவிட்டாா். இதன்பேரில், நாகை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் (பொ) மகேந்திரன் மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது, நாகையை அடுத்த புத்தூா் பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில், மருத்துவா் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்ததும், ரூ. 340 விலையிலான அந்த மருந்தை ரூ. 2,500-க்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்தக் கடையிலிருந்த கருக்கலைப்பு மாத்திரைகளை சுகாதாரத் துறை அலுவலா்கள் கைப்பற்றினா். மேலும், அந்தக் கடையின் உரிமையாளா் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளவும், துறை ரீதியான நடவடிக்கைகளுக்கும் சுகாதாரத் துறையினா் பரிந்துரைத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT