திருமருகல் அருகே நரிமணம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு ஊராட்சித் தலைவா் காா்த்திக் தலைமை வகித்தாா். கால்நடை உதவி மருத்துவா் முத்துக்குமரன் முன்னிலை வகித்தாா். இதில், கால்நடைகளுக்கு தடுப்பூசி, நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்ற இம்முகாமில், சிறந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதில், ஊராட்சி துணைத் தலைவா் ராமதாஸ் மற்றும் கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.