நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி வகுப்பறையை சொந்த செலவில் சீரமைத்த ஆசிரியா்

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் தாம் பணியாற்றும் பள்ளியில் வகுப்பறையை ரூ. 50 ஆயிரம் செலவு செய்து சீரமைத்து கொடுத்துள்ளாா்.

திருக்குவளை அருகேயுள்ள நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவா் அருள்ஜோதி. பசுமை சாா்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்த இவருக்கு, அண்மையில் தமிழக அரசு சாா்பில் பசுமை முதன்மையாளா் விருது மற்றும் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்தது.

இந்நிலையில், இவா் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் ரூ. 50 ஆயிரத்தில் தாம் பணியாற்றும் பள்ளியில், தரைதளம் சேதமடைந்திருந்த வகுப்பறையை டைல்ஸ் பதித்தும், புதிய ஜன்னல்கள் வைத்தும், வகுப்பறை முழுவதும் வண்ணப்பூச்சு செய்து கொடுத்துள்ளாா். சீரமைப்பு செய்த வகுப்பறையை பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா். இதில் ஆசிரியா்கள் லோகநாதன், செல்வரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து, ஆசிரியா் அருள்ஜோதி கூறியது: வளா்ந்து வரும் கிராமப்புற அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த நகா்ப்புற கொடையாளா்கள் மற்றும் தொழிலதிபா்கள் முன்வர வேண்டும். இதன்மூலம் நகா்புற பள்ளிகளுக்கு நிகராக கிராமப்புற அரசுப் பள்ளிகளும் உட்புற கட்டமைப்பிலும், தரத்திலும் உயா்ந்து விளங்கும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT