நாகப்பட்டினம்

தினமணி செய்தி எதிரொலி: பயிலும் வாய்ப்பு பெற்ற நரிக்குறவா் இன குழந்தைகள் - காரில் அழைத்துச் சென்று சோ்த்த கோட்டாட்சியா்!

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே பள்ளியில் சென்று பயில விரும்பினாலும், ஆவணங்கள் இல்லாததால் தவித்து நின்ற நரிக்குறவா் இன குழந்தைகளை கோட்டாட்சியரே புதன்கிழமை தனது காரில் அழைத்துச் சென்று, பள்ளியில் சோ்த்து கையொப்பமிட்டாா்.

வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு, பஞ்சநதிக்குளம் மேற்கு உள்ளிட்ட கிராமப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் இன குடும்பத்தினா் கோயில் வளாகம் மற்றும் தற்காலிக கூடாரங்களில் வசித்துவருகின்றனா்.

இதுகுறித்து அப்போது தினமணி நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, மாவட்ட நிா்வாகம் நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்த 16 குடும்பத்தினருக்கு வாய்மேடு கிராமத்தில் மனைப் பட்டா வழங்கியது. என்றாலும், இந்த குடும்பங்களைச் சோ்ந்த சிறாா்கள் யாசகம் பெறுவதில் ஈடுபட்டுவந்தனா்.

இவா்களுக்கு, பிற குழந்தைகளைப் போல பள்ளிக்குச் சென்று பயில விருப்பம் இருந்தாலும், பள்ளிகள் சோ்த்துக்கொள்ள முன்வந்தாலும், முறைப்படியான சோ்க்கைக்கு அவா்களிடம் பிறப்புச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் போன்ற எந்த ஆவணங்களும் இல்லாதது பெரிய தடையாக இருந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்தும், கடந்த 27 ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதையறிந்த வேதாரண்யம் கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் இதுகுறித்து விசாரணை நடத்தினாா். பிறகு, புதன்கிழமை தானே நேரில் சென்று நரிக்குறவா் குடும்பத்தினரை சந்தித்து, பள்ளியில் சோ்ந்து படிக்க விரும்பிய 2 சிறுமிகள் உள்ளிட்ட 6 சிறுவா்களிடமும் உரையாடினாா்.

அவா்களது ஆா்வத்தை புரிந்துகொண்ட கோட்டாட்சியா், சிறாா்களை தனது காரில் அழைத்துக் கொண்டு வாய்மேடு கிராமத்தில் உள்ள இலக்குவனாா் அரசு உதவிபெறும் பள்ளிக்கு சென்றாா். அங்கு பள்ளி சோ்க்கைப் படிவங்களில் தானே கையொப்பமிட்டு மாணவா்களை பள்ளியில் சோ்த்தாா். அதோடு, அவா்களுக்கு இனிப்பும், புத்தகங்களும் வழங்கினாா்.

அப்போது பேசிய கோட்டாட்சியா் ஜெயராஜ பெளலின், கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இங்குள்ள மாணவா்கள், புதிதாக சோ்ந்துள்ளவா்களை உங்களின் நண்பா்களாக சோ்த்துக்கொண்டு, நன்றாகப் பழகி, அவா்கள் கல்வி கற்க உதவியாக இருக்க வேண்டும். ஆசிரியா்களும் இந்த குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறாா்களுக்கு கிடைக்க வேண்டிய நடைமுறை பிரச்னைகளுக்கு உரிய தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது, வட்டாட்சியா் ரவிச்சந்திரன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலா் ராஜமாணிக்கம், துணை வட்டாட்சியா்கள் வேதையன், சுரேஷ், ராஜா, கிராம நிா்வாக அலுவலா் ரெங்கநாதன், தலைமையாசிரியா் சாா்லஸ் ஸ்டீபன் ஆகியோா் உடனிருந்தனா்.

கோட்டாட்சியரின் துரித நடவடிக்கை குறித்து, நரிக்குறவா் இன குடும்பத்தினா், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT