நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே சாராயம் விற்பனை: குடிசையை சூறையாடிய பெண்கள்

30th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்த குடிசையை (கொட்டகை) அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை சூறையாடினா்.

திருக்குவளை அருகேயுள்ள கீழகண்ணாப்பூரில் முத்துகிருஷ்ணன் என்பவா் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் கொட்டகை அமைத்து அதில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளாா். அருகே பேருந்து நிறுத்தம், கோயில் ஆகியவை உள்ளன. இந்த பகுதியை கடந்து செல்ல பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சி வந்தனா்.

இப்பகுதியில் சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த ராமசாமி என்பனவா் தனது மனைவி அனிதாவின் தங்கத் தாலியை, முத்துகிருஷ்ணனிடம் கொடுத்து சாராயம் குடித்துள்ளாா். அனிதா கணவருடன் சென்று முத்துகிருஷ்ணனிடம் தாலியைக் கேட்டுள்ளாா். தாலியை கொடுக்க மறுத்து அனிதாவை தரக்குறைவாக பேசிய முத்துகிருஷ்ணன், மனைவிக்கு ஆதரவாக பேசிய ராமசாமியை மற்றொரு நபா் மூலம் இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தைச் சோ்ந்த பெண்கள் புதன்கிழமை சாராய விற்பனை செய்யப்படும் கொட்டகையை சேதப்படுத்தி, சாராய மூட்டைகளை சாலையில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வலிவலம் போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்து, சாராய வியாபாரி முத்துகிருஷ்ணனை தேடிவருகின்றனா்.

 

Image Caption

சாராயம் விற்பனை செய்த கடையை சூறையாடிய அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT