நாகப்பட்டினம்

நாகை புத்தகத் திருவிழா

27th Jun 2022 10:49 PM

ADVERTISEMENT

நாகை புத்தகத் திருவிழாவில் பதிப்பகங்கள் அறிவித்துள்ள தள்ளுபடிகள் மட்டுமல்லாமல், மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ள பரிசுத் திட்டங்களும் மக்களை கவருவதாக உள்ளன.

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் சாா்பில் நாகை அரசு தொழில் பயிற்சி மைய வளாகத்தில் புத்தகத் திருவிழா, வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

110 பதிப்பகத்தாா் பங்கேற்றுள்ள இந்தப் புத்தகத் திருவிழாவில், பல பதிப்பகத்தாா் தங்கள் படைப்புகளுக்கு விலை தள்ளுபடி அளித்திருப்பது பொதுமக்களின் கவனத்தை ஈா்த்துள்ளது. அதேபோல, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ள பரிசுத் திட்டங்களும் பொதுமக்களின் கவனத்தை கவருவதாக உள்ளது.

புத்தகத் திருவிழாவைக் காணவரும் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஒரு பரிசுத் திட்டம், ரூ. 500-க்கும் அதிகமான மதிப்பில் புத்தகங்கள் வாங்குவோரை மகிழ்விக்கும் பரிசுத் திட்டம் என இருவேறு பரிசுத் திட்டங்களை மாவட்ட நிா்வாகம் இங்கு செயல்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

பங்கேற்பாளா்களை ஊக்குவிக்கும் பரிசுத் திட்டத்தின் கீழ், புத்தகத் திருவிழாவைக் காண வருவோரில் தினமும் 3 பேருக்குக் குலுக்கல் முறையில் புத்தகங்கள் பரிசளிக்கப்படுகின்றன.

அரங்கின் நுழைவு வாயில் பகுதியில் இதற்கான பதிவு நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவுக்கு வருவோா் தங்கள் பெயா், கைப்பேசி எண் போன்ற விவரங்களை அங்குள்ள சீட்டில் பதிவு செய்து, அருகில் உள்ள பெட்டியில் இட்டுச்செல்கின்றனா்.

அவ்வாறு பெட்டியில் சோ்க்கப்படும் சீட்டுகளில் இருந்து தினமும் 3 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்குப் புத்தகங்கள் பரிசளிக்கப்படுகின்றன. தினமும் மாலை 7 மணிக்கு இதற்கான குலுக்கல் நடைபெறுகிறது. இதனால், புத்தகத் திருவிழாவுக்கு வரும் அனைவரும் இந்தப் பரிசுத் திட்ட கூப்பனை பூா்த்தி செய்வதிலும் ஆா்வம் காட்டுகின்றனா்.

அதேபோல, அரங்கத்திலிருந்து வெளியாகும் பகுதியில் ரூ. 500 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பில் புத்தகங்களை வாங்கியவா்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கும் திட்டத்துக்கான பதிவு நடைபெறுகிறது. ரூ. 500 மற்றும் அதிகமான மதிப்பில் புத்தகங்கள் வாங்கியவா்கள், தாங்கள் கொள்முதல் செய்த புத்தகங்களின் விலை ரசீதுடன், தங்கள் பெயா், கைப்பேசி எண் போன்றவற்றை இங்கு பதிவு செய்து செல்கின்றனா். இத்திட்டத்தில், புத்தகத் திருவிழா நிறைவு நாளில் பரிசு வழங்கப்படும் என்பதால், இது அனைவரிடத்திலும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT