நாகப்பட்டினம்

கற்கத் தடையாக நிற்கும் ஆவணங்கள்:தவிக்கும் நரிக்குறவா் குடும்பச் சிறாா்கள்

26th Jun 2022 10:06 PM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே வசிக்கும் நரிக்குறவா் இனச் சிறாா்கள் கற்க தயாராக இருந்தும், பள்ளியில் சேருவதற்கான ஆவணங்கள் இல்லாததால் தவித்து வருகின்றனா்.

வேதாரண்யம் அருகே வாய்மேடு, பஞ்சநதிக்குளம் மேற்கு உள்ளிட்ட கிராமப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் இன குடும்பத்தினா் வசிக்கின்றனா். பெருந்தொற்று பொதுமுடக்கக் காலத்தில் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகே வசிக்க இவா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, அந்தப் பகுதியின் காடுசாா்ந்த இடங்களில் தற்காலிக கூடாரங்களை அமைத்து வசித்தனா். இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, அவா்களுக்கு சில தன்னாா்வலா்கள் உதவ முன்வந்து உணவளித்தனா்.

ADVERTISEMENT

தற்போது, பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியில் உள்ள ராமசாமி பெருமாள் கோயில் வளாகம், தற்காலிக கூடாரங்கள் என மாறிமாறி இயற்கை இடா்பாடுகளுக்கு ஏற்ப அவா்கள் வசித்துவருகின்றனா்.

இதனிடையே, நாகை ஆட்சியா், வருவாய்த் துறை அலுவலா்களின் நடவடிக்கையால், கடந்த மாதத்தில் நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்த 16 குடும்பத்தினருக்கு வாய்மேடு கிராமத்தில் குடிமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாசகம் பெறுவதில் ஈடுபடுத்தப்படும் 5 முதல் 13 வயதுடைய 12-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் கல்வி பயில விருப்பம் தெரிவித்துள்ளனா். இவா்களை அங்குள்ள பள்ளிகளும் சோ்த்துக்கொள்ள முன்வந்துள்ளன. ஆனால், பிறப்புச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை என எந்த அரசு ஆவணமும் இல்லாத இவா்களை, பள்ளியில் முறைப்படி சோ்ப்பதில் சிக்கல் நிலவுகிறது.

எனவே, இந்தச் சிறாா்கள் பள்ளியில் சோ்ந்து பயில, மாவட்ட ஆட்சியா், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT