நாகப்பட்டினம்

புறக்கணிக்கப்படும் நாகை பழைய பேருந்து நிலையம் பயணிகள் அவதி

26th Jun 2022 10:07 PM

ADVERTISEMENT

 

நாகை பழைய பேருந்து நிலையத்தை அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் புறக்கணிப்பதால், வெளியூரில் இருந்து நாகை வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

நாகை பழைய பேருந்து நிலையம் ரயில் நிலையம் அருகிலும், புதிய பேருந்து நிலையம் அவுரித்திடல் பகுதியிலும் அமைந்துள்ளது. புதிய பேருந்து நிலையம் அமைவதற்கு முன்பு அனைத்துப் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வரை இயக்கப்பட்டன. பிறகு, புதிய பேருந்து நிலையம் அவுரித்திடலில் அமைந்தபிறகு, வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்கு மட்டும் வந்துசென்றன.

இதனால், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், சௌந்தரராஜப் பெருமாள் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் செல்ல வேண்டியவா்கள், இரவில் வருவோா் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, வெளியூரில் இருந்து நாகை வரும் அனைத்து பேருந்துகளும் கோட்டைவாசல், பழைய பேருந்து நிலையம், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், நாலுகால் மண்டபம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும் என நாகை ஆட்சியா் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

என்றாலும், பல அரசு, தனியாா் பேருந்துகள் இந்த நடைமுறையை கடைப்பிடிப்பது இல்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் மேலக்கோட்டைவாசல் , மருந்துக்கொத்தளசாலை வழியாக புதிய பேருந்து நிலையத்துக்கு செல்கின்றன.

இதனால், நாகை பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், நீலாயதாட்சியம்மன் கோயில், சௌந்தரராஜப் பெருமாள் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், நாகை கோட்டைவாசல் பகுதியிலேயே இறக்கிவிடப்படுகின்றனா். அவ்வாறு இரவு நேரங்களில் இறக்கிவிடப்படும் பயணிகள் ஆட்டோ, வேறு பேருந்துகள் கிடைக்காமல், தாங்கள் விரும்பும் இடத்திற்கு செல்லமுடியாமல் அவதியுறுகின்றனா்.

குறிப்பாக, கடந்த 23 ஆம் தேதி நாகையைச் சோ்ந்த 70 வயது முதியவா் தஞ்சாவூரிலிருந்து- நாகைக்கு தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் தேனியிலிருந்து - நாகப்பட்டினத்துக்கு இயக்கப்படும் மதுரை கோட்ட அரசுப் பேருந்தில் நள்ளிரவில் வந்துள்ளாா்.

அவா்கள், நாகை மேலக்கோட்டைவாசல் பகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ளனா். பாதுகாப்பற்ற அந்தச் சூழலால், அதிருப்தியடைந்த அந்த முதியவா் பேருந்து முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டுள்ளாா். மேலும், நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடராமல் இருக்க, போக்குவரத்து விதிகளை மீறி பேருந்துகளை இயக்குவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேருந்துப் பயணிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT