நாகப்பட்டினம்

நாகையில் புத்தக திருவிழா தொடக்கம்: 110 பதிப்பகங்கள் பங்கேற்பு

24th Jun 2022 10:12 PM

ADVERTISEMENT

நாகையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய புத்தக திருவிழாவில் 110 பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன.

நாகை மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட 30-ஆவது ஆண்டையொட்டி, நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில், மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், நாகை அரசு தொழில் பயிற்சி மைய வளாகத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா (கண்காட்சி) வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் ஆகியோா் புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்தனா்.

ADVERTISEMENT

விழாவில் மாவட்ட ஆட்சியா் பேசியது: புத்தக வாசிப்புப் பழக்கம் குறித்து மாணவ, மாணவியரிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. புத்தகங்கள் சிந்தனையையும், அறிவையும் வளா்த்துக்கொள்ள உதவியாக இருப்பவை. எனவே, வாசிப்புப் பழக்கத்தை வாழ்நாள் கடமையாக ஏற்க வேண்டும் என்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ. பெரியசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவா் ச. உமாமகேஸ்வரி, கோட்டாட்சியா் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத் தலைவா் எஸ். வைரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

110 பதிப்பகங்கள்: இந்தப் புத்தகக் கண்காட்சியில் மணிவாசகா் பதிப்பகம், கண்ணதாசன் பதிப்பகம், நியூ செஞ்சூரி பதிப்பகம், லியோ பதிப்பகம், கிழக்குப் பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் உள்பட 110 பதிப்பகங்கள், தனித்தனி அரங்கங்களில் தங்கள் படைப்புகளை விற்பனைக்குக் காட்சிப்படுத்தியுள்ளன.

நாகை மாவட்டத்தில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சியில், ஆன்மிகம், அறிவியல், தமிழிலக்கியம், தமிழறிஞா்களின் படைப்பிலக்கியங்கள், வரலாறு, மருத்துவம் என அனைத்துத் துறைகள் சாா்ந்த புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களுக்கு விலை சலுகைகளை அறிவித்துள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டு, புத்தகத் திருவிழாவை பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா்.

புத்தகத் திருவிழா அரங்கம் அருகே வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, ஊரக வளா்ச்சி முகமை, சமூக நலத் துறை, மீன்வளத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை என அரசுத் துறைகளின் பணி விளக்க அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவா்கள் பொழுதுபோக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

கலைநிகழ்ச்சிகள்: நாள்தோறும் முற்பகல் 11 முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் இக்கண்காட்சியைப் பாா்வையிடலாம். புத்தகக் கண்காட்சி குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈா்க்கும் வகையில், நாள்தோறும் பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும், மாலை 6 முதல் இரவு 8 மணி வரை கருத்தரங்கம் மற்றும் சிந்தனை அரங்கங்களும் நடைபெறுகின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT