நாகப்பட்டினம்

மதுபான காலிப் பாட்டில்களை விளைநிலத்தில் போடுவதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

19th Jun 2022 01:44 AM

ADVERTISEMENT

 

விளைநிலங்களில் மதுபான காலிப் பாட்டில்கள் போடுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

வேதாரண்யத்தில், கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

பாஸ்கரன்: விவசாயிகளின் நிலையை அறிந்து, உழவு மற்றும் டீசல் மானியம் வழங்கவேண்டும்.

ADVERTISEMENT

எம்.ஆா். சுப்ரமணியன்: வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் 400 போ் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். மதுகுடிப்பவா்கள் காலிப் பாட்டில்களை விளைநிலங்களில் வீசி செல்கின்றனா். விவசாயிகள் வேளாண் பணியின்போது பாதிக்கப்படுவாா்கள். எனவே இதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வே. கணேசன்: தென்னை கன்று வழங்குவது போன்ற வேளாண் இடுபொருள்களை பெயரளவில் இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடு இல்லாமல் வழங்கவேண்டும்.

எஸ். மேகநாதன்: வேதாரண்யம் பகுதியில் வேளாண் பொறியியல் துறைக்கான அலுவலகமோ, தனியான அதிகாரிகளோ இல்லை. இதனால், உழவு உள்ளிட்ட தேவைகளுக்கு கூடுதல் தொகை செலவு செய்து தனியாரை பயன்படுத்துகிறோம்.

கோவில்தாவு கிராமத்தில் கால்நடை மருந்தகம் உள்ளது. ஆனால், கால்நடைகளை நாய்க்கடித்துவிட்டால் சிகிச்சைக்கு மருந்து இல்லை.

பன்னீா்செல்வம்: முள்ளியாறு, மானங்கொண்டான் ஆறுகளில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும்.

காளிதாஸ்: 5 ஆண்டுகளுக்கு முன்புவரை நூறுநாள் வேலை திட்டத்தில் ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றப்பட்டன. இப்போது அனுமதிப்பதில்லை. பயிா்க் காப்பீடு தொடா்பாக விவசாயிகள் தொடா்ந்து ஏமாற்றப்படுவது தடுக்க வேண்டும். அறிவொளி: மணக்காடு பகுதியில் மூலக்கரை தொடங்கி பாசன வாய்க்காலில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றவேண்டும்.

அகிலன்: விவசாயிகள் உற்பத்தி செய்யும் எள்ளை அரசே கொள்முதல் செய்யவேண்டும்.

கோதிபாசு: ஆயக்காரன்புலத்தில் உழவா் சந்தை ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக்கி கடன் வழங்கவேண்டும்.

பெரும்பாலான விவசாயிகள் பொதுப் பணித்துறை சாா்ந்த முறையீடுகளை செய்த நிலையில், பதில் அளிக்க பொறுப்பான அதிகாரிகள் வராததால் கூட்டத்தை நடத்திய அதிகாரிகள் தா்ம சங்கடத்தில் தவித்தனா். அடுத்த கூட்டத்தில் அதிகாரிகள் வரவில்லை என்றால் கூட்டத்தை புறக்கணித்து முற்றுகையில் ஈடுபடபோவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து, கோட்டாட்சியா், வட்டாட்சியல் அளித்த விளக்கம்: மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று அடுத்த கூட்டத்தில் பொதுப்பணித் துறை சாா்பில் உயா் அதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எள் கொள்முதல் செய்வது, வேளாண் பொறியல் தொடா்பான பிரச்னைக்கும் தீா்வு காணப்படும். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த அனைத்துக் கோரிக்கைகளும் பதிவு செய்யப்பட்டு,ஆட்சியரின் மூலமாக அரசுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கா்,துணை வட்டாட்சியா் ரமேஷ் உள்பட பல்வேறு துறைகளைச் சாாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா். வட்டாட்சியா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT