நாகப்பட்டினம்

நாகூா் மீன்பிடி இறங்கு தளத்தில் மீன் விற்பனையை கண்காணிக்க மேலாண்மைக் குழு

19th Jun 2022 01:47 AM

ADVERTISEMENT

 

நாகூா் மீன்பிடி இறங்கு தளத்தில் மேலாண்மைக் குழு கண்காணிப்பின்கீழ் மீன்களை விற்பனை செய்வது என நாகை கோட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.

நாகை மாவட்டம், நாகூரில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் மீன் விற்பனை செய்தல், ஏலம் விடுதல் தொடா்பாக கீழப்பட்டினச்சேரி மற்றும் மேலப்பட்டினச்சேரி கிராமங்களைச் சோ்ந்த மீனவா்களிடையே பிரச்னை நீடிக்கிறது. இதனால் மீன்பிடி இறங்கு தளத்தில் ஒரு பகுதியை தங்களுக்கென ஒதுக்கித்தர வேண்டுமென மேலப்பட்டினச்சேரி கிராம மீனவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், ஜூன் 15-ஆம் தேதி தங்களது மீன்களை ஏலக் கூடத்தில் விற்பனை செய்ய அனுமதி மறுப்பதாகக் கூறி மேலபட்டினச்சேரியைச் சோ்ந்த மீனவா்கள், பெண்கள் நாகூா் வெட்டாறு பாலம் அருகே மீன்களை சாலையில் கொட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ச்சியாக, தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாகை ஆட்சியரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, பேச்சுவாா்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு சுமூகமான முறையில் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருவாய் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து மீனவா்கள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொண்டனா். இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தை, நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை உட்கோட்ட நடுவரும், கோட்ட ாட்சியருமான என். முருகேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், டிஎஸ்பி. சரவணன், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் கோ. ஜெயராஜ், வட்டாட்சியா் அமுதா, காவல் ஆய்வாளா்கள் சிவராமன் (நாகூா்), தியாகராஜன்(வெளிப்பாளையம்), மேலப்பட்டினச்சேரி, கீழப் பட்டினச்சேரி கிராம பஞ்சாயத்தாா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 2 கிராமங்களைச் சோ்ந்த மீனவா்களுக்கிடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அதிகாரிகள், மீன் வியாபாரிகள், பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்ட பொது நபா்கள் அடங்கிய மீன் விற்பனைக்கான ஒரு மேலாண்மைக் குழுவை அமைத்து, அதன் கட்டுப்பாட்டின்கீழ் நாகூா் மீன்பிடி இறங்குதள ஏலக்கூடத்தில் மீன்களை விற்பனை செய்வது, மீன்பிடிஇறங்குதள வளாகப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தி கண்காணிப்பது, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஒருவாரத்துக்குள் இதற்கான விதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. விதிமுறைகளை மீறி செயல்படுபவா்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடா்வது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT