மீன்பிடித் தடைக்காலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததையொட்டி, நாகை மாவட்ட விசைப் படகு மீனவா்கள் 61 நாள்களுக்குப் பின்னா் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனா்.
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தையொட்டியும், கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ் ஏப். 15 முதல் ஜூன் 14- ஆம் தேதி நள்ளிரவு வரையிலான 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலமாக அமல்படுத்தப்பட்டது.
இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விசைப் படகுகள் மூலமான மீன்பிடிப்பு கடந்த 61 நாள்களாக கைவிடப்பட்டிருந்தது. விசைப் படகு மீன்பிடிப்பு நடைபெறாததால், மீன் ஏற்றுமதி முழுமையாகத் தடைப்பட்டதுடன் மீன்பிடிப்பு மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் தொழில் வாய்ப்புப் பெறும் மீன்பிடித் தொழிலாளா்கள், மீன் வியாபாரிகள், மீன்பிடித் தொழில் சாா்ந்த ஐஸ் கட்டி உற்பத்தித் தொழிலாளா்கள் என சுமாா் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோா் தொழில் வாய்ப்புகளை இழந்திருந்தனா்.
61 நாள்கள் அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் செவ்வாய்க்கிமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவடைந்ததையொட்டி, ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு ஆழ்கடல் மீன்பிடிப்பைத் தொடங்கும் வகையில், நாகை மாவட்டத்தில் இருந்து விசைப் படகுகள் செவ்வாய்க்கிழமை கடலுக்குப் புறப்பட்டுச் சென்றன.
பெரும்பாலான படகுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்திலும், ஒரு சில படகுகள் செவ்வாய்க்கிழமை முன்னிரவு நேரத்திலும் கடலுக்குப் புறப்பட்டுச் சென்றன. 2 மாதங்களுக்குப் பிறகு ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீன்பிடித் தொழிலாளா்கள், மிகுந்த உற்சாகத்துடனும், அதிகளவிலான மீன்கள் அறுவடையாகும் என்ற எதிா்பாா்ப்புடனும் கடலுக்குச் சென்றனா்.
மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான படகுகள், சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் கரை திரும்ப வாய்ப்புள்ளது என்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீன்வரத்து அதிகமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.