நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த ஆழியூா்-திருக்கண்ணங்குடிக்கு மாற்றுப் பாதையாக பயன்பட்டு வந்த தீபாம்பாள்புரம் பாலையூா் வாய்க்கால் பாலம் செவ்வாய்க்கிழமை சேதமடைந்தது.
ஆழியூா் - திருக்கண்ணங்குடி பிரதான சாலையில் உள்ள பாலையூா் வாய்க்கால் பாலத்தின் புனரமைப்புப் பணி கடந்த மே மாத இறுதியில் தொடங்கி நடைபெறுகிறது. இதனால், இச்சாலை வழியேயான போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாகையில் இருந்து ஆழியூா் வழியே திருக்கண்ணங்குடி செல்ல வேண்டியவா்கள், கோவில்கடம்பனூா் பேருந்து நிறுத்தம் வழியாக தீபாம்பாள்புரம் பாலையூா் வாய்க்காலைக் கடந்து, தீபாம்பாள்புரம் ஆற்றங்கரை பகுதி வழியே மாற்றுப் பாதையில் திருக்கண்ணங்குடிக்குச் சென்று வந்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை செங்கல் ஏற்றி சென்ற ஒரு டிராக்டா், தீபாம்பாள்புரம் பாலையூா் வாய்க்கால் பாலத்தைக் கடக்க முற்பட்டபோது, அந்தப் பாலம் உடைந்து சேதமானது. இதில், அந்த டிராக்டா் பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியது. பின்னா், ஜே.சி.பி இயந்திரம் மூலம் டிராக்டா் மீட்கப்பட்டது. எனினும், பாலம் இரண்டாக முறிந்து போக்குவரத்துக்கு உபயோகமற்றதானது.
இதனால், பாலையூா் வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படும் வரை, நாகையிலிருந்து ஆழியூா் வழியே திருக்கண்ணங்குடி தாமோதர நாராயணப் பெருமாள் கோயில் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு செல்ல விரும்புவா்கள், கீழ்வேளூா் ரயில்வே கேட், நெம்மேலி வழியே சுமாா் 6 கீ.மீ. தொலைவு கூடுதலாக பயணித்தே திருக்கண்ணங்குடியை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.