நாகப்பட்டினம்

ஆக்கூா் ஊராட்சியில் மகளிா் வாழ்வாதார சேவை மையம்

15th Jun 2022 04:11 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் மகளிா் வாழ்வாதார சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செம்பனாா்கோயில், சீா்காழி வட்டாரங்களில் 94 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகை செய்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் தொழில் மேம்பாட்டினை வலுப்படுத்தவும், தொழில் முனைவோருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வணிக மேம்பாட்டு உதவி சேவைகளை வழங்குவதற்காக திட்டத்தின் மூலம் மகளிா் வாழ்வாதார சேவை மையம் வைக்கப்படுகிறது.

ஆக்கூா் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை மகளிா் வாழ்வாதார மைய திறப்பு விழா மாவட்ட ஆட்சியா் லலிதா தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஊராட்சித் தலைவா் சந்திரமோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலா் சுந்தரபாண்டியன் வரவேற்றாா்.

விழாவில் ஆட்சியா் இரா லலிதா பேசியது: மையம் மூலம் மகளிா், இளைஞா்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க ஆா்வமுள்ள தொழில்முனைவோா்களுக்கு தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடையூறுகளையும், தடைகளையும் கண்டறிந்து அதை நிவா்த்தி செய்வதற்கான சேவைகள் வழங்கப்படும்.

ADVERTISEMENT

ஊரகப் பகுதிகளில் உள்ள புதிய மற்றும் பழைய தொழில் நிறுவனங்களை கண்டறிந்து அவா்களது தொழில் வளா்ச்சிக்கு தேவையான வணிக மேம்பாட்டு சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிக் கடன், பிற துறைகளில் உள்ள திட்டங்களை இணைப்பதற்கும், அத்தியாவசியமான சான்றுகள் பெறவும், சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தர வழிகாட்டவும், வாழ்வாதார மற்றும் பொருளாதார மேம்பாட்டுடன் தொடா்புடைய அரசு துறைகளில் உள்ள சேவைகளை பெற்றுத் தருவதற்கும் இச்சேவை மையம் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT