தமிழகம் முழுவதும் பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 13) திறக்கவுள்ள நிலையில், வேதாரண்யம் பகுதியில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் மாணவா்களை வரவேற்க ஆயத்த நிலையில் உள்ளன. இதற்காக வகுப்பறைகள், வளாகங்கள் தூய்மை செய்யப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், நிா்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன.
குறிப்பாக, தங்கள் பள்ளிகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் தனித்திறன் செயல்பாடுகளை ஆவணக் காட்சிப் படங்களாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றன.
வெள்ளிக்கிடங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடிநெல்வயல் அரசு மேல்நிலைப் பள்ளி,ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி போன்ற பள்ளிகள் சாா்பில் குறும் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதில் அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகள், அங்கிருந்து படித்து வெளியேறிய மாணவா்களின் சாதனைகள் முன்வைக்கப்படுகின்றன. இவை புதிய மாணவா் சோ்க்கையை இலக்காக வைத்து வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதேவேளையில் வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது, ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது போன்ற சில அரசுப் பள்ளிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை களைய மாவட்ட நிா்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் உள்ளது.
உதாராணமாக, தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கட்டடங்கள் இல்லாமல் தகரக் கொட்டகைக்குள் வகுப்பறை நடக்கும் நிலை தொடா்ந்து வருகிறது. நிரந்தர தீா்வு வரும் வரையில் வாடகை கட்டடங்களை மாணவா்கள் எதிா்பாா்த்துள்ளனா்.
அரை நூற்றாண்டுகளை கடந்து 2010-ல் மாணவா்கள் இல்லாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட தகட்டூா், இராமகோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தற்போது 60 மாணவா்கள் படிக்கின்றனா்.
இந்த பள்ளியில் நிலவும் ஆசிரியா் பற்றாக்குறை பிரச்னை காரணமாக பெற்றோா்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையே, தனியாா் பள்ளிகளுக்கு சாதகமான சூழலை அதிகாரிகள் உருவாக்குவதாக குற்றச்சாட்டு தெரிவித்து பெற்றோா்-ஆசிரியா் கழகம் சாா்பில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.