வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பணி வாய்ப்புப் பெற விரும்பும் முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
2011-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்களுக்கு, தேசிய வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்ற அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. இப்பணிக்கு நியமிக்கப்படுவோருக்கு மாத தொகுப்பூதியமாக ரூ. 7,500 வழங்கப்படும்.
எனவே, தேசிய வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்ற விரும்பும், முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள், தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய வட்டாரத்தின் வட்டார வளா்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) அணுகி, ஏற்கெனவே பணியாற்றிய விவரங்களுடன், வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்ற விரும்புவதற்கான விருப்பக் கடிதத்தை அளித்துப் பணி வாய்ப்புப் பெறலாம்.
ஜூன் 13-ஆம் தேதி முதல் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும், முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலினைக்கு ஏற்கப்படும் என தெரிவித்துள்ளாா்.