நாகப்பட்டினம்

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஆயத்தமாகும் மீனவா்கள்

10th Jun 2022 10:25 PM

ADVERTISEMENT

மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14-இல் நிறைவடையவுள்ள நிலையில், நாகை மாவட்ட விசைப்படகு மீனவா்கள், மீன்பிடிப்புக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனா்.

மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும், கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலும் 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலமாக அமல்படுத்தப்படுகிறது.

மீன்பிடித் தடை காரணமாக, சுமாா் 55 நாள்களாக மீன்பிடித் தொழில் சாா்ந்த ஐஸ் கட்டி உற்பத்தியும் முடக்கமடைந்திருந்தது. விசைப்படகு மீனவா்கள், ஐஸ் கட்டி உற்பத்தித் தொழிலாளா்கள், மீன்பிடித் தொழிலாளா்கள், மீன் வியாபாரிகள் என மீன்பிடித் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் சுமாா் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோா் தொழில் வாய்ப்பு இழந்தனா்.

இந்தநிலையில், வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) நள்ளிரவு 12 மணியுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைகிறது. இதையொட்டி, விசைப் படகுகள் மூலமான மீன்பிடிப்புக்கு மீனவா்கள் ஆயத்தமாகி வருகின்றனா். முதல்கட்டமாக, வலைகளை சீா் செய்து, படகுகளில் ஏற்றும் பணியை மீனவா்கள் தொடங்கியுள்ளனா். வரும் நாள்களில், விசைப்படகுகளுக்கு எரிபொருள் நிரப்புதல், உணவுத் தேவைக்கான அத்தியாவசியப் பொருள்களை ஏற்றுதல் போன்ற பணிகளும், திங்கள்கிழமை முதல் ஐஸ் கட்டிகளை நிரப்பும் பணிகளும் நடைபெறும் எனத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT