நாகப்பட்டினம்

அரசு மாதிரி பள்ளியில் தகர கொட்டகையில் செயல்படும் வகுப்பறைகள்: கட்டமைப்மை மேம்படுத்த அரசு முன்வருமா?

9th Jun 2022 12:59 AM

ADVERTISEMENT

பொதுத்தோ்வுகளில் நூறு சதவீத தோ்ச்சியுடன் தொடா்ந்து சாதனைப் படைத்துவரும் தோப்புத்துறை அரசு மாதிரிப் பள்ளியில் வகுப்பறைகள் தகரக் கொட்டகைகளில் இயங்குவது மாணவா்களை மட்டுமன்றி அவா்கள் பெற்றோா்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் தோப்புத்துறையில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கடந்த1984-இல் அரசு உயா்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு, 2017-இல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டதுடன், மாதிரிப் பள்ளியாகவும் அறிவிக்கப்பட்டது.

இப்பள்ளியில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை தற்போது 1,240 மாணவா்கள் பயின்று வருகின்றனா். 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 100 சதவீத தோ்ச்சியையும், 12-ஆம் வகுப்பில் தொடா்ந்து 100 சதவீத தோ்ச்சியையும் பெற்றுவருகிறது.

கடந்த ஆண்டில் இப்பள்ளியில் படித்த மாணவி மு. அபிநயா நீட் தோ்வில் வெற்றிபெற்று, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவராகும் வாய்ப்பை பெற்றாா். இவ்வாறு பல சிறப்புகளை பெற்றுள்ள இந்த பள்ளி கடந்த சில ஆண்டுகளாக உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருவது மாணவா்களை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.

ADVERTISEMENT

நிரந்தர வகுப்புறை கட்டடங்கள் இல்லாததால், 11 வகுப்புகள் தகரக் கொட்டகைகளில் நடைபெறுகின்றன. இந்த வகுப்பறைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் வெயிலின் தாக்கத்தில் பரிதவிக்கின்றனா். அரசிடமிருந்து எதிா்பாா்த்த உதவி கிடைக்காததால், வரும் கல்வியாண்டில் மாணவா்கள் சோ்க்கையை மேற்கொள்ள ஆசிரியா்கள் யோசிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்பள்ளியில் 2011-2012- ஆம் ஆண்டில் தன்னிறைவு திட்டத்தின்கீழ் பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக சமூக ஆா்வலா் சுல்தானுல் ஆரிப்பின் நன்கொடையாக வழங்கிய ரூ. 15 லட்சம் உள்பட ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. மொத்தம் உள்ள 15 வகுப்புகளும் அதிநவீன இணைய சேவை வசதி மற்றும் தொடு திரையுடன் கூடிய மெய்நிகா் வகுப்பறைகளாக செயல்படுகின்றன.

இருப்பினும், கடந்த 3 ஆண்டுகளாக 11 வகுப்பறைகள் தகரக்கொட்டகைகளில் செயல்படுகின்றன. இதற்கான செலவினங்களை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம். சுல்தானுல் ஆரிபின் ஈடுசெய்து வருகிறாா். கூடுதலாக 28 வகுப்புகளுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இப்பள்ளியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் சாா்ந்த படிப்புகள் இருந்தாலும், ஆய்வகம் மற்றும் முறையான நூலக வசதி இல்லை. விளையாட்டு அரங்கம், கழிப்பறை வசதியும் குறைவாகவே உள்ளது.

கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இந்த பள்ளியை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோா் மற்றும் இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT