வேதாரண்யம் அருகே முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, உப்பளத் தொழிலாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடிநெல்வயல் நடுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ரா. சதாசிவம் (60), ரெ. கந்தசாமி(41). இவா்களில் தனியாா் உப்பு உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்துவந்த கந்தசாமி, குடிநீா் பிரச்னை உள்ளிட்ட பொது பிரச்னைகளில் தீா்வுகாண ஆா்வம் காட்டி வந்தாா்.
இந்நிலையில், சதாசிவத்துக்கும், கந்தசாமிக்கும் திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கந்தசாமி கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சதாசிவம், சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையிலும், பிறகு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதாசிவம், செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கந்தசாமியை கைது செய்தனா்.