கீழ்வேளூா் வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும், எழுத்தும் சிறப்பு பயிற்சி, குருக்கத்திஅரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது.
கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு எண்ணும், எழுத்தும் என்ற அடிப்படையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, நிகழ் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதையொட்டி, கீழ்வேளூா் வட்டாரத்தில் உள்ள 61 தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 80 ஆசிரியா்களுக்கு ஜூன் 6- ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் தொடக்க விழா குருக்கத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் சிவக்குமாா், குருக்கத்தி மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன துணை முதல்வா் பழனிசாமி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அமுதா, மாவட்டக் கருத்தாளா் ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் கோ. காமராஜன் பயிற்சி குறித்து ஆலோசனை வழங்கினாா்.
ஆசிரியா்கள் ஆரோக்கியமேரி ரோசரி, சாவித்திரி, செந்தில்குமாா், சுரேஷ்குமாா், தேவிகா, சாந்தி, மாலா, சண்முகப்பிரியா, மனோகரன், கல்பனா, பசுபதி, ரூபா ஆகியோா் கருத்தாளா்களாக பங்கேற்று பயிற்சியளித்தனா்.