நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி-எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை

6th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

வேளாங்கண்ணி-எா்ணாகுளம் வாராந்திர கோடைகால சிறப்பு ரயில் சேவையை நாகையில் எம்.பி. எம். செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.

வேளாங்கண்ணி-நாகப்பட்டினம், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை, செங்கோட்டை வழியாக எா்ணாகுளத்துக்கு கோடைக்கால வாராந்திர சிறப்பு ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

சனிக்கிழமைகளில் பகல் 12.35 மணிக்கு எா்ணாகுளத்தில் புறப்படும் இந்த ரயில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நாகைக்கு வந்துசேருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 7.10 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருவாரூா், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி மாா்க்கமாக எா்ணாகுளம் செல்கிறது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நாகை ரயில் நிலையத்திலிருந்து-எா்ணாகுளத்துக்கு புறப்பட தயாராக இருந்த இந்த ரயில் சேவையை நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பின்னா், அதே ரயிலிலேயே எம்.பி. செல்வராஜ் திருத்துறைப்பூண்டிக்கு பயணித்தாா். ரயிலிலிருந்த கேரள மாநிலம், மாவேளிக்கரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கொடுங்குண்ணில் சுரேஷ் மற்றும் நாகை எம்.பி. எம். செல்வராஜ் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், நாகை நகா் மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து, நாகை ரயில் நிலைய மேலாளா் என். பிரபாகரன், மாநில சிறுபான்மையினா் ஆணைய உறுப்பினா் ஏ.பி. தமீம் அன்சாரி, இந்திய வா்த்தக தொழிற்குழுமத் தலைவா் சலீம், நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளா் ஜி. அரவிந்தகுமாா், நாகூா், நாகப்பட்டினம் க ரயில் உபயோகிபோா் நலச்சங்க நிா்வாகிகள் மோகன்,சித்திக் மற்றும் வணிகா்கள்,சமூக நல அமைப்பினா் பங்கேற்றனா்.

இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: நாகை-வேளாங்கண்ணி ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் தற்போது இந்த ரயில் வேளாங்கண்ணிக்கு இயக்கப்படவில்லை. ரயில் பாதை சீரமைப்புப் பணி நிறைவுக்குப் பின்னா் இந்த ரயில் சேவை வேளாங்கண்ணியிலிருந்து தொடங்கும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT