நாகப்பட்டினம்

நாகை - வேளாங்கண்ணி தடத்தில் நாளைமுதல் ரயில்கள் இயக்கம்

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை - வேளாங்கண்ணி அகல ரயில்பாதையில் ஜூலை 29 ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

நாகை - வேளாங்கண்ணி அகல ரயில்பாதை சுமாா் 10 கி.மீ. நீளம் கொண்டது. இந்த ரயில்பாதை, கடந்த 2010, டிசம்பா் 20 ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2020, மாா்ச் மாதம் ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, இத்தடத்தில் அகல ரயில்பாதையின் தரத்தை மேம்படுத்தி, சீரமைக்கும் பணிகளும், மின்மயமாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிகள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், அகல ரயில்பாதையின் தரம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, மின்மயமாக்கப்பட்ட பாதையின் தரம் குறித்து தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளரின் ஆய்வு கடந்த திங்கள்கிழமை (ஜூலை 24) நடைபெற்றது.

இந்த ஆய்வுகளின் முடிவு குறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடங்கும் முன்பாக வேளாங்கண்ணி தடத்தில் ரயில் சேவை தொடங்குமா என்பது குறித்து பொதுமக்களிடம் மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவியது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதி கிடைக்கப் பெற்ன்பேரில், நாகை - வேளாங்கண்ணி தடத்தில் வெள்ளிக்கிழமை முதல் (ஜூலை 29) ரயில்சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, தினமும் காலை 4.15 மணி மற்றும் காலை 11. 30 மணிக்கு நாகை- வேளாங்கண்ணிக்கும், 9.40 மணிக்கு காரைக்கால் - வேளாங்கண்ணிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. புதிய சேவையாக திருச்சியிலிருந்து பிற்பகல் 4.30 மணிக்குப் புறப்படும் பயணிகள் ரயில், நாகையிலிருந்து நேரடியாக இரவு 8.50-க்கு வேளாங்கண்ணியைச் சென்றடைகிறது.

பிறகு, அந்த ரயில் வேளாங்கண்ணியிலிருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு சென்னை (கம்பன்) விரைவு ரயிலுக்கு இணைப்புப் பெறும் வகையில், இரவு 9.45 மணிக்கு நாகையை அடைகிறது. மேலும், காலை 10.55 மணிக்கு வேளாங்கண்ணி - நாகைக்கும், பிற்பகல் 4.30 மணிக்கு வேளாங்கண்ணி- காரைக்காலுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

2 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - வேளாங்கண்ணி தடத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கம் தொடங்கப்படுவது, நாகை, வேளாங்கண்ணி மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT