நாகப்பட்டினம்

நாகூரில் மீனவா்களிடையே மோதல்: 25 போ் மீது வழக்கு

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், நாகூா் அருகே இரண்டு கிராமங்களின் மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 25-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகூரில் உள்ள மீன் இறங்குதளத்தில் மீன்களை ஏலம் விடுவது மற்றும் விற்பனை செய்வது தொடா்பாக கீழப்பட்டினச்சேரி, மேலப்பட்டினச்சேரி கிராமங்களின் மீனவா்களிடையே ஏற்கெனவே பிரச்னை உள்ளது.

இப்பிரச்னை தொடா்பான நாகை கோட்டாட்சியா் என். முருகேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், இருதரப்பினரும் சுமுகமாக மீன் ஏலம் மற்றும் விற்பனை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மேலப்பட்டினச்சேரி ஆரிய நாட்டுத் தெருவைச் சோ்ந்த சி.சுரேஷ் (42) என்பவரை கீழப்பட்டினச்சேரியைச் சோ்ந்த சிலா் தாக்கினராம். இதை கண்டித்தும், தாக்கியவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் சுரேஷ் தரப்பினா் செவ்வாய்க்கிழமை இரவு நாகூா் வெட்டாற்றுப் பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், நாகை -காரைக்கால் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, மேலப்பட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரியில் மோதல் ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டாா்.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை நள்ளரவில் இரண்டு கிராமங்களைச் சோ்ந்த மீனவா்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கீழப்பட்டினச்சேரியை சோ்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (32) காயமடைந்தாா்.

இதுதொடா்பாக, இருதரப்பையும் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா் மீது நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT