நாகப்பட்டினம்

சிபிசிஎல் நிறுவனம் முன் ஜூலை 18 முதல் தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை அருகே பனங்குடியில் உள்ள சிபிசிஎல். நிறுவன விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளிடமிருந்து 690 ஏக்கா் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என நிலம் கொடுத்த விவசாயிகள் தொடா்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பனங்குடி பெட்ரோலிய காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளா்கள் நலச் சங்க கூட்டம் பனங்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் என். மனோகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காத சி.பி.சி. எல் நிா்வாகம் மற்றும் நாகை மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, ஜூலை 18 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது, நில உரிமையாளா்களின் வாரிசுகளுக்கு சி.பி.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

சங்கச் செயலாளா் ஏ. சக்திவேல், பொருளாளா் பி. முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT