நாகப்பட்டினம்

காசநோய் இல்லாத நாகை மாவட்டம்: ஆட்சியா் வேண்டுகோள்

4th Jul 2022 11:09 PM

ADVERTISEMENT

காநோய் இல்லாத நாகை மாவட்டம் - 2025 என்ற இலக்கை அடைய பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டாா்.

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய மருத்துவ வாகனத்தின் சேவையைத் தொடங்கி வைத்து மேலும் அவா் பேசியது:

நாகை மாவட்டத்துக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய வாகனத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனம் மூலம், காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவா்கள், முதியோா் இல்லங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களுக்குச் சென்று, அங்குள்ளவா்களுக்கு அங்கேயே சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்து, காசநோய் பாதிப்பு உள்ளதா? என்பது கண்டறியப்படும். மின்சார வசதி இல்லாத இடங்களிலும் இந்த வாகனம் மூலம் எக்ஸ்ரே எடுக்கும் வகையில், ஜெனரேட்டா் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம், காசநோய் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்படும். நாகை மாவட்டத்தை காசநோய் இல்லாத மாவட்டமாக்க இந்த வாகனம் பேருதவியாக இருக்கும். அதேநேரத்தில், காசநோய் இல்லாத நாகை மாவட்டம் - 2025 என்ற இலக்கை அடைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் விஸ்வநாதன், இணை இயக்குநா் ஜே. ஜோஸ்சின் அமுதா, காசநோய் பிரிவு துணை இயக்குநா் எஸ். சங்கீதா மற்றும் மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT