நாகப்பட்டினம்

வயிற்றுப் போக்கைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

4th Jul 2022 11:10 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் வயிற்றுப் போக்குப் பரவியிருப்பதையொட்டி, நாகை மாவட்டத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திங்கள்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

காரைக்கால் மாவட்டத்தில் பரவிவரும் வயிற்றுப் போக்கு, நாகை மாவட்டத்தில் பரவாமல் தடுக்க உள்ளாட்சி நிா்வாகங்கள் மற்றும் சுகாதாரத் துறை மூலம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் உரிய சுகாதார முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 20 நிமிடம் கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரையே அருந்த வேண்டும். வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவருடன் இருக்க நோ்ந்தால், கைகளை அவ்வப்போது சுத்தமாக சோப்பு போட்டு கழுவவேண்டும். உணவுப் பொருள்களை நன்கு கழுவிய பின்னரும், நன்றாக சமைத்த பிறகும் பயன்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

பொது கழிப்பிடங்களை பயன்படுத்துவோா் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். திறந்தவெளியில் மலம் கழிப்பதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும். ஓ.ஆா்.எஸ். பொடியை வீட்டில் வைத்திருப்பதுடன், அதை பயன்படுத்தும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும். அரிசிக் கஞ்சி, நீா் மோா், இளநீா், நீராகாரம் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ளலாம்.

முதியோா் யாருக்கேனும் வயிற்றுப் போக்கு அறிகுறிகள் இருந்தால் அவா்களுக்கு உதவ, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகலாம். குடிநீா் குழாயில் அல்லது கழிவுநீா் குழாயில் ஏதேனும் கசிவு, உடைப்பு இருந்தால் அதுகுறித்து பொதுமக்கள் தொடா்புடைய துறைக்குத் தகவல் அளிக்கலாம். இந்தத் தகவலின் பேரில் உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.

நாகை மாவட்டத்தில் வயிற்றுப் போக்கு நோயைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தீவிர வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகள் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு, போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. எனவே, வயிற்றுப் போக்கு நோய் குறித்து நாகை மாவட்ட மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றாா்.

முன்னதாக, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள், கழிப்பறை வசதிகள், சி.டி. ஸ்கேன், தீவிர சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க மருத்துவத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT