நாகப்பட்டினம்

மழை பாதிப்பு: எள் பயிா்களுக்கு நிவாரணம் கோரி முற்றுகை

2nd Jul 2022 09:46 PM

ADVERTISEMENT

வேதாரண்யம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட எள் பயிா்களுக்கு நிவாரணம் கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

வேதாரண்யம் பகுதியில் கடந்த பருவத்தில் நெல் அறுவடைக்குப் பிறகு, தரிசு நிலங்களில் விவசாயிகள் எள் சாகுபடி செய்தனா். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பருவம் தவறி பெய்த மழையால் எள் பயிா்கள் பாதிக்கப்பட்டன. இதனால், தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவந்தனா். இருப்பினும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தை வட்டார விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகையிட்டனா். அப்போது, குறுவை சாகுபடிக்கான தொகுப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

இதையடுத்து, வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், விவசாயிகள் சங்கத் தலைவா் டி.வி. ராஜன், செயலாளா் ஒளிச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரவி, துணை வட்டாட்சியா் க. ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இப்பேச்சுவாா்த்தையில், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகக் கூறி, விவசாயிகள் கலைந்து சென்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT