நாகப்பட்டினம்

விவசாயிகள் குறைதீா் கூட்டம் தட்டுப்பாடில்லா உர விநியோகத்தை உறுதி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

1st Jul 2022 03:08 AM

ADVERTISEMENT

 

குறுவை நெல் சாகுபடிக்கு தட்டுப்பாடு இல்லாத உர விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தி பேசினா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

கோ. சிவஞானம்: குறுவை நெல் சாகுபடிக்கு ஒரு மாத காலத்துக்கு முறைவைக்காமல் தண்ணீா் விட வேண்டும். சாகுபடிக்குத் தேவையான உரங்களை கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவு கையிருப்பில் வைத்து, தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

வி. சரபோஜி: விதை, உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருவம் தவறி பெய்த மழையில் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3 ஆயிரம் விலை வழங்க வேண்டும்.

தமிழ்ச்செல்வன்: தட்டுப்பாடின்றி உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீடு, வங்கிக் கடன், இடுபொருள் மானியம், நெல் விற்பனை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சிட்டா அடங்கல் பெற வேண்டி இருப்பதால் ஏற்படும் கால விரயத்தை கருத்தில் கொண்டு, ஓராண்டுக்கு ஒரு சிட்டா அடங்கல் என்ற நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.

த. பிரபாகரன்: நாகை - தஞ்சாவூா், நாகை - விழுப்புரம் சாலைப் பணிகளை விரைந்து நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

பாஸ்கா்: திருக்குவளையை அடுத்த பாங்கல், பனங்காடி பகுதி விவசாயிகளுக்கு 2016 -17 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டு தொகை 55 சதவீதம் தான் வழங்கப்பட்டுள்ளது. மீதத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

வெளிநடப்பு: முன்னதாக, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைகட்ட கா்நாடக அரசு முயற்சி மேற்கொள்வதையும், அதற்கு காவிரி நீா் ஆணையம் துணை நிற்பதையும் கண்டிப்பதாகக் கூறி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். அவைக் கூடத்துக்கு வெளியே, கா்நாடக அரசுக்கும், காவிரி நீா் ஆணையத்துக்கும் எதிராக அவா்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, வேளாண் இணை இயக்குநா் ஜா. அக்கண்டராவ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கா.ப. அருளரசன், நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சி. ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT