நெல் கொள்முதலில் இணையவழிப் பதிவு முறையை ரத்து செய்யவேண்டும் என நாகை எம்பி எம். செல்வராஜ் வலியுறுத்தினாா்.
கீழையூா் ஒன்றியம், கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி கிராமத்தில் அரசின் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் வேதநாயகி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் மு.ப. ஞானசேகரன் முன்னிலை வகித்தாா்.
கீழையூா் வட்டார அட்மா குழுத் தலைவா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, கொள்முதல் பணியை தொடங்கிவைத்தாா். முன்னதாக, ஒன்றிய கவுன்சிலா் டி. செல்வம் வரவேற்றாா். நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் பங்கேற்று, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகளின் தரம் மற்றும் எடையை ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறுகையில், ‘பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு, இணையவழி பதிவு முறை என்பது பெரும் இடா்பாடாக உள்ளது. எனவே, மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தி, இணையவழி பதிவு முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
ஆய்வின்போது, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் வீ. சுப்பிரமணியன், ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏ. ராமலிங்கம், ஊராட்சி துணைத் தலைவா் வீ. கமலஹாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.