நாகப்பட்டினம்

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

29th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வலசை வருவது வழக்கம். இங்குவரும் பூநாரைகள் உள்ளிட்ட அரியவகை பறவைகளை காண்பதற்கு ஏராளமான பாா்வையாளா்கள் இங்கு வருவா்.

இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

முன்னதாக, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாப்பாளா் ந. சதீஷ், நாகை மாவட்ட வன உயிரினக் காப்பாளா் யோகேஸ்குமாா் மீனா ஆகியோா் பங்கேற்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி குறித்து குழுவினருக்கு விளக்கமளித்தனா்.

ADVERTISEMENT

வனச்சரக அலுவலா் அயூப்கான் தலைமையில் வனத்துறையினா், மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் இணை இயக்குநா் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினா், ஏவிசி கல்லூரியைச் சோ்ந்த பாஸ்கரன், உதவிப் பேராசிரியா் திரிபுரசுந்தரி ஆகியோா் தலைமையில் கல்லூரி மாணவா்கள், வன விலங்குகள் ஆா்வலா் சிவகணேசன் தலைமையில் தன்னாா்வலா்கள், மித்ரா குழுவினா் ஆகியோா் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா். பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமையும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT