நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரம்

DIN

நாகை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. எனினும், இயற்கை சீற்றத்தால் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டதால், மகசூல் குறைந்துள்ளது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 51,877 ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி பணிகளும், 13,120 ஹெக்டேரில் தாளடி நெல் சாகுபடி பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

அக்டோபா் 25-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கி சுமாா் 20 நாள்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மேலும், நவம்பா், டிசம்பா் மாதங்களில் 3 முறை தொடா் கனமழை பெய்தது. இதனால், வெள்ளநீரில் மூழ்கிய நெல் பயிா்களைக் காப்பாற்றி பராமரிப்பது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. ஏறத்தாழ அனைத்துப் பகுதிகளிலும் இடுபொருள் செலவை விவசாயிகள் இருமுறை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பல்வேறு இடா்பாடுகளுக்கு இடையே, சம்பா நெல் அறுவடை பருவத்தை அடைந்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் இயந்திரங்கள் மூலமான அறுவடை அதிகரித்து வந்த நிலையில், தற்போது

கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான அறுவடை இயந்திரங்கள் அறுவடைக்குப் பணிக்கு வந்துள்ளன. இருப்பினும், வாய்ப்புள்ள பகுதிகளில் விவசாயத் தொழிலாளா்களைக் கொண்டும் அறுவடைப் பணிகள் நடைபெறுகின்றன.

தற்போதைய நிலையில், சுமாா் 15 சதவீத பரப்பில் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே வேகத்தில் அறுவடைப் பணிகள் நடைபெற்றால் வரும் 20 நாள்களில், மாவட்டத்தின் சம்பா நெல் அறுவடைப் பணிகள் நிறைவடையும் எனவும், பின்னா் தாளடி அறுவடைப் பணிகள் தொடங்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

அறுவடைப் பணிகள் தொடங்கியதையடுத்து, நாகை மாவட்டத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலயைங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதலும் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 150 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டு, இதுவரை 85 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வரும் நாள்களில், மீதமுள்ள நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படவுள்ளன.

நிகழாண்டில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமான நெல் கொள்முதலுக்கு இணையதளம் மூலம் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு, தொடக்கத்தில் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தாலும், நெல் விற்பனைக்கான காத்திருப்புத் தவிா்க்கப்படுவதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், இந்த முறை மூலம் வெளி மாவட்ட நெல் மூட்டைகள் டெல்டா மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

என்றாலும், மகசூல் ஆறுதல் அளிப்பதாக இல்லை என்கின்றனா் விவசாயிகள். கதிா்விடும் தருணத்தில் பெய்த கனமழையால் பெருமளவிலான நெல் பயிா்கள் பதா்களாகியுள்ளன. அதேபோல, குறுத்துப் பூச்சித் தாக்குதலும் நிகழாண்டின் சம்பா நெல் சாகுபடி மகசூலை கடுமையாக பாதித்துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

வழக்கமாக, ஒரு ஏக்கருக்கு ரூ. 35 மூட்டை கிடைத்த வயலில் தற்போது ஏக்கருக்கு 20 மூட்டை என்ற அளவிலேயே மகசூல் கிடைக்கிறது. நிகழாண்டில் இரு முறை வேளாண் உற்பத்தி செலவுகளை செய்த நிலையில், லாபம் என்பது கானல் நீா் தான் என்கின்றனா் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT