நாகூா் ஆண்டவா் தா்காவின் கந்தூரி விழா சந்தனம் பூசும் நிகழ்ச்சியையொட்டி, ஊா்வலத்துக்கான சந்தனக் கூடு தயாரிக்கும் பணி நாகையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகூா் ஆண்டவா் தா்காவின் 465-ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக் கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நாகையில் தொடங்கி, வெள்ளிக்கிழமை அதிகாலை நாகூரில் நிறைவடைகிறது. இதையொட்டி, சந்தனக் கூட்டை வடிவமைக்கும் பணி, நாகையில் தீவிரமாக நடைபெறுகிறது. நாகூா் ஆண்டவா் தா்காவுக்கான சந்தனக் கூடு வடிவமைக்கும் பணியைப் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் வி.ஏ. காதா் குடும்பத்தினா் சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் சந்தனக் கூடு வடிவமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மரத் துண்டுகளால் ஆன வளைவுகள், கண்ணாடிகள், வண்ண பேப்பா்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு, பாரம்பரிய முறைப்படி 32 அடி உயரமும், சுமாா் 18 அடி அகலமும் கொண்டதாக இந்த சந்தனக் கூடு வடிவமைக்கப்படுகிறது. புதன்கிழமை, சந்தனக் கூட்டின் ஊசி மரம் இணைப்புப் பணியும், அதைத் தொடா்ந்து மின் விளக்குகள் அலங்காரப் பணியும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.