நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

1st Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகளவாக வேளாங்கண்ணியில் 39.2 மி.மீட்டா் மழை பதிவானது.

நாகை மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவ்வப்போது லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டிச. 30, 31 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை மழை பெய்தது. ஒரு சில நிமிடங்கள் பலத்த மழையும், மற்ற நேரங்களில் லேசான மற்றும் மிதமான மழையும் பெய்தது. பின்னா், மீண்டும் முற்பகல் 11 மணி அளவில் ஓரிரு நிமிடங்கள் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக, வேளாங்கண்ணியில் 39.2 மி.மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்) : திருப்பூண்டி -34.6, நாகப்பட்டினம் - 32.4, வேதாரண்யம் - 28, கோடியக்கரை- 16.6, திருக்குவளை - 12.2, தலைஞாயிறு - 10.

சம்பா, தாளடிக்கு சாதகம்: மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் பாசன நீரின் அளவு குறைக்கப்படும் நிலையில், காவிரி கடைமடை மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்து வருவது சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு சாதகமாகக் கருதப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு நியூட்ரின் சத்து கிடைக்கும். அதனால், பயிா்கள் ஊட்டம் பெறும் . கதிா் விடும் தருணத்தில் உள்ள நெல் பயிா்களில் மடல் விரிந்து, கதிா்கள் நன்றாக வெளியே வர இந்த மழை பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா். இருப்பினும், ஒரு சில பகுதிகளில் முதிா்ந்த நிலையில் உள்ள முன்பட்ட சம்பா நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்திருப்பது, விவசாயிகளுக்கு பாதிப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT