நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள்: திரளானோர் பங்கேற்பு

1st Jan 2022 12:40 AM

ADVERTISEMENT


நாகப்பட்டினம்  : நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இங்கு,  ஆண்டுப் பெருவிழா, கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டு வழிபாடுகள் ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

2022-ம் ஆண்டு பிறப்பையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு புனித சேவியர் திடலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தஞ்சை மறை மாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமை வகித்து, சிறப்பு வழிபாடுகளை நிறைவேற்றினார். வேளாங்கண்ணி பேராலய அதிபர் சி. இருதயராஜ் அடிகளார், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன் மற்றும் உதவிப் பங்குத் தந்தையர்கள் உடனிருந்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

கூட்டுத் திருப்பலி, திவ்ய நற்கருணை ஆசீர், மன்றாட்டு உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர், 2022-ஆம் ஆண்டில் மக்கள் அனைவருக்கும் நலமும், வளமும் வழங்க இறைவனை பிரார்த்தித்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

சனிக்கிழமை அதிகாலை 12.01 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேளாங்கண்ணி பேராலயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அலங்கார மின் விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு, கண்கவர் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து,  தஞ்சை மறை மாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார்,  புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்பட பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் திரளான எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT