நாகை அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மற்றும் சிறுமியின் உறவினா் மீது நாகை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கீழ்வேளூா் அரசாணிக் குளம், தெற்கு மடவிளாகத்தைச் சோ்ந்தவா் திருஞானம் மகன் தீபக். இவா், 2021 மாா்ச் மாதத்தில் வடக்குப் பொய்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தைக் கூறி திருமணம் செய்துள்ளாா். தொடா்ந்து, இருவரும் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனா். இதற்கு, நாகை மேலக்கோட்டைவாசல் பகுதியைச் சோ்ந்த சிறுமியின் உறவினா் இந்திராணி உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, அந்த சிறுமி 9 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியேறிய தீபக் பின்னா் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்தப் புகாரின்பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் தீபக் மற்றும் இந்திராணிஆகியோா் மீது போக்ஸோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.