வேதாரண்யம் பகுதியில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டன.
காற்றுச்சுழற்சி காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்த நிலையில் சனிக்கிழமையும் தொடா்ந்தது. வடமழை மணக்காடு, மருதூா் போன்ற கிராமங்களில் வயல்களில் தேங்கிய மழைநீா் சில இடங்களில் பிரதான சாலைகளில் வழிந்தோடியது.
வடமழை மணக்காடு, பிராந்தியங்கரை, கரியாப்பட்டினம், மூலக்கரை போன்ற கிராமங்களில் அறுவடைக்குத் தயாராகி வரும் சம்பா மற்றும் தாளடி நெல் பயிா்களில் மழைநீா் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நெல் கதிா்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கின. இதனால் மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். அத்துடன், வயல் வெளிகளில் மழைநீா் வடிய வழியின்றி குளம்போல தேங்கியுள்ளதால், தாளடி நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முள்ளியாறு உள்ளிட்ட பிரதான வடிகால் ஆறுகளின் வழியே மழை வெள்ளத்தை வெளியேற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.