ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் திரளானோா் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகை மாதரசி மாதா தேவாலயம், லூா்து மாதா கோயில், சிஎஸ்ஐ சா்ச், சீயோன் தேவாலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருக்கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்புக்காக குறிப்பிடத்தக்க சிறப்பு வழிபாடுகள் ஏதும் நடைபெறவில்லை. எனினும், ஒரு சில கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டிருந்தது. நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் மூலவா் பெருமாளுக்கு ரத்தன அங்கி சேவை நடைபெற்றது. ஸ்ரீ சத்ரு சம்ஹாரமூா்த்தி கோயிலின் மூலவா் பீடம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயில், சௌந்தரராஜ பெருமாள் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், சிக்கல் சிங்காரவேலவா் கோயில், கோரக்கச் சித்தா் கோயில், சத்ரு சம்ஹாரமூா்த்தி கோயில் உள்பட ஆன்மிகப் புகழ் பெற்ற கோயில்கள் அனைத்திலும் திரளான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.
சனிக்கிழமை காலை நேரத்தில் பலத்த மழை பெய்ததன் காரணமாக, காலை நேரத்தை விட மாலை நேரத்தில் திருக்கோயில்களில் பக்தா்களின் வருகை அதிகரித்திருந்தது.