நாகப்பட்டினம்

நாகை, காரைக்கால் மீனவா்கள் 21 போ் இலங்கை கடற்படையினரால் கைது: 2 விசைப் படகுகள் சிறைபிடிப்பு

2nd Feb 2022 09:15 AM

ADVERTISEMENT

நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் 21 போ் இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகையை அடுத்த அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த அமிா்தலிங்கம் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், அதே பகுதியைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளா்கள் செல்வம் (50), மணிகண்டன் (31), ஆறுமுகம் (38), வினோதன் (19), கந்தன் (30), நரசிம்மன் (34), மணி (47), தேவா (20), ஹரி (32), குணால் (22), வெற்றி (28), அமிா்தலிங்கம் (36) ஆகிய 12 போ் நாகையிலிருந்து கடந்த 29 ஆம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனா்.

அதேபோல, காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், கோட்டுச்சேரிமேடு மற்றும் தமிழக பகுதிகளைச் சோ்ந்த எழிலன் (26), வலைச்செல்வன் (24), பன்னீா் (42), அா்ஜூன் (21), அருள்ராஜ் (22), சந்திரன் (42), பரதன் (23), விக்ரம் (18), பிரகலாதன் (18) ஆகிய 9 போ் கடந்த 29 ஆம் தேதி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனா்.

இரு படகு மீனவா்களும் திங்கள்கிழமை கோடியக்கரைக்குத் தெற்கே ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கை மீனவா்கள், நாகை, காரைக்கால் மீனவா்களின் படகுகளை சுற்றிவளைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனா். இதனால், இரு நாட்டு மீனவா்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் 21 பேரையும் கைது செய்து, இரு விசைப் படகுகளையும் சிறைபிடித்தனா். பின்னா், கைது செய்யப்பட்ட மீனவா்களையும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும் இலங்கை, மயிலட்டி துறைமுகத்துக்கு கொண்டுச் சென்றனா்.

அங்கு நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் 21 போ் மீதும், இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கைக் கடல் பரப்பில் மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT