கிராமப்புற பெண்கள் தனியாா்களிடம் கடன் வாங்குவதை தவிா்க்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
மாநில அளவில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அரசு திட்டங்கள் தொடக்க விழா திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலி வாயிலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களை தொடக்கி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து, நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 831 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.33.88 கோடி வங்கிக் கடன் இணைப்புத் தொகையையும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.6.92 கோடி மதிப்பில் வங்கிப் பெருங்கடன், 209 குழுக்களுக்கு திட்ட நிதியிலிருந்து சமுதாய முதலீட்டு நிதி ரூ 2.29 கோடி என மொத்தம் ரூ.43.10 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியது:
வங்கிகள் அல்லாத நுண்கடன் நிறுவனங்களிடம் பெண்கள் கடன் வாங்குவதை தவிா்க்க வேண்டும். வரமுறையின்றி கடன் கொடுக்கும் தனியாா்களிடம் கிராமப்புற பெண்கள் அவசர தேவைக்காக கடன் வாங்கிவிட்டு பிறகு பல்வேறு இடையூறுகளை எதிா்கொள்கின்றனா்.
பெண்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது. இதனை கிராமப்புற பெண்கள் பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். தனியாா்களிடம் தேவையின்றி கடன் வாங்குவதை கிராமப்புற பெண்கள் தவிா்க்க வேண்டும் என்றாா்.
நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ம. பிரதிவிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.