நாகப்பட்டினம்: வேதாரணயம் அருகே கோவில்பத்து பகுதியில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகளில் முறைகேடு நடந்திருப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதாக தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது. தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுலவகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுக் கணக்குக் குழுத் தலைவா் செல்வப் பெருந்தகை தலைமையிலான குழுவினா் செய்தியாளா்களிடம் கூறியது:
வேதாரண்யம் அருகே கோவில்பத்து பகுதியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ.151 கோடியில் சேமிப்புக் கிடங்குகள் கடந்த 2013-15 ஆண்டுகளில் கட்டப்பட்டன. அப்போது கஜா புயல் தாக்குதலில் கிடங்குகளின் மேற்கூரைகள் சேதமடைந்ததுள்ளன. இதனை சீரமைக்க ரூ.69 கோடி மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இயற்கை பேரிடா் தாக்கக்கூடிய பகுதியில் ஏன் கிடங்குகள் அமைக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது. இப்பகுதியில் சேமிப்புக் கிடங்குகள் அமைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கைத் துறை கண்டுபிடித்ததின் பேரில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நாகூா் தா்காவில் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என்பதால் நிதி ஒதுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாகூா் சில்லடி தா்காவை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையின்படி ஆய்வு செய்யப்படடபோது, தா்கா குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு.செல்வபெருந்தகை, உறுப்பினா்கள் ம.சிந்தனை, எம்.எச்.ஜவாஹிருல்லா, பூண்டி கே.கலைவாணன், மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.நாகை மாலி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றிருந்தனா்.