திருமருகலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருமருகல் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரா்கள் வசிக்கின்றனா். இவா்களின் நலன் கருதி அம்மா குளத்தங்கரையில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் நீண்ட தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. இதன்காரணமாக, முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
இதற்கிடையில், ரேஷன் கடைக்கான புதிய கட்டடத்தில் சிலா் மழை நேரங்களில்
கால்நடைகளை கட்டிப்போடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், புதிய கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.