ஆவின் பொருள்களின் விலை உயா்வைத் தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
நாகை மாவட்ட மாவட்டக் குழு கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியது:
இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத பிற மாநிலங்களில் ஆளுநா்களைக் கொண்டு இரட்டை ஆட்சி முறையை பாஜக நடத்தி வருகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழக ஆளுநா் தொடா்ந்து பேசி வருகிறாா். அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டிசம்பா் 29-ஆம் தேதி ஆளுநா் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.
பல பேரின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மிக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டம் நீா்த்துப் போகும் வகையில், கையெழுத்திடாமல், ஆன்லைன் விளையாட்டை நடத்தும் நிறுவனங்களை அழைத்து ஆளுநா் பேசியிருப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 -21-ஆம் ஆண்டு இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு உரிய பயிா் காப்பீட்டு தொகையை தனியாா் காப்பீட்டு நிறுவனம் வழங்காமல் உள்ளது. அதனைப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவின் நிறுவனம் லாபகரமாக இயங்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தாமல், உயா்த்திய விலையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றாா்.
மாவட்டச் செயலா் சிவகுரு பாண்டியன், மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ஜி.பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினா் டி.செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.